News Just In

9/12/2026 06:18:00 AM

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் மீலாத் விழா : நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்குணங்கள் குறித்து விசேட மார்க்க உரை

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் மீலாத் விழா : நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்குணங்கள் குறித்து விசேட மார்க்க உரை





மாளிகைக்காடு செய்தியாளர்
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மீலாத் தின நிகழ்வு 09.09.2026 புதன்கிழமை பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சதீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சாய்ந்தமருதின் மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா (ரஷ்ஷாதி) அவர்கள், “நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்குணங்கள்” எனும் தலைப்பில் விசேட மார்க்க உரையாற்றினார்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உன்னதமான வாழ்க்கை, நற்குணங்கள், மனிதநேயம், அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லொழுக்க விழுமியங்களை மாணவர்கள் தமது வாழ்வில் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளரும், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளருமான நூறுல் ஹுதா உமர், பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர்.ஹாத்திம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய அம்சமாக மாணவர்களின் இஸ்லாமிய கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் திறமைகள் மற்றும் மார்க்க விழுமியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதன்போது, 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்விச் சாதனையைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இப்பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மாணவர்களின் மத்தியில் இஸ்லாமிய விழுமியங்கள், நல்லொழுக்கம் மற்றும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையை எடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மீலாத் நிகழ்வு, பாடசாலையின் கலாசாரப் பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

No comments: