News Just In

8/04/2026 11:11:00 AM

"FIT FOR LIFE CRICKET FIESTA 2026" கிரிக்கெட் தொடரில் Primary Medical Stars சம்பியன்

"FIT FOR LIFE CRICKET FIESTA 2026" கிரிக்கெட் தொடரில் Primary Medical Stars சம்பியன்



நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவினால் பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட "FIT FOR LIFE CRICKET FIESTA 2026" கிரிக்கெட் சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நிறைவுற்றதுடன், Primary Medical Stars அணி சம்பியன் பட்டத்தையும் கிண்ணத்தையும் கைப்பற்றியது.

சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 2ஆம் திகதி கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இறுதிப் போட்டியில் Primary Medical Stars மற்றும் Ayurvedic Riders அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற Ayurvedic Riders அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய Primary Medical Stars அணி, நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களைப் பெற்றது.

63 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய Ayurvedic Riders அணி, 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால், Primary Medical Stars அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.

மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் RDHS Health Heroes அணியும் MOH Warriors அணியும் மோதிய நிலையில், RDHS Health Heroes அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றது. இதன்படி Primary Medical Stars அணி முதலிடத்தையும், Ayurvedic Riders அணி இரண்டாம் இடத்தையும், RDHS Health Heroes அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன
.

தனிநபர் விருதுகளில், இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும் Primary Medical Stars அணியின் எச்.எம்.எம். நிஸ்மி தெரிவு செய்யப்பட்டார். தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக RDHS Health Heroes அணியின் மலிக் றஹ்மான் விருதைப் பெற்றார்.

நிகழ்வின் நிறைவில், பிரதம அதிதி வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத் மற்றும் பிராந்திய பிரிவுத் தலைவர்கள் இணைந்து வெற்றி பெற்ற அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் சம்பியன் கிண்ணங்கள், வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

சுகாதாரப் பணியாளர்களிடையே உடற்தகுதி, ஒற்றுமை மற்றும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இக்கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: