News Just In

6/11/2026 01:15:00 PM

இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த பாலச்சந்திரன் படுகொலைக்கான நீதிக்கோரல்

இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த பாலச்சந்திரன் படுகொலைக்கான நீதிக்கோரல்



ஜே .வி.பி.தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகன் கொல்லப்படவில்லை சஹ்ரான் உயிரிழந்தபோதும் அவரது மகள் பாதுகாப்பாக இருக்கின்றார். அப்படியானால் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட்டபோது மட்டும் ஏன் அவரின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்படவேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தக்காலத்தில் அவ்வாறு இடம்பெற்றிருந்தால், அது யுத்தக்குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் நேற்றைய(10.06.2026) நாடாளுமன்ற உரையில் வலியுறுத்தினார்.

'பிரபாகரனின் மகன் படுகொலை சனல் 4 ஆவணப்படம் பொய்கூறுகிறது. பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிராகரிக்கின்றது'' என்று புதன்கிழமை வெளியான தமிழ் பத்திரினை ஒன்றின் செய்தியை சபைக்கு காட்டி தனது கருத்துக்களை முன்வைத்த அவர்,

“அதாவது சனல் 4 ஊடகம் வெளியிடும் ஆவணப்படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பான விடயங்கள் உள்ளன.



பாலச்சந்திரன் தொடர்பான படங்கள் பல வெளிவந்துள்ளன. முதலில் பதுங்கு குழியில் உணவுடன் அமர்ந்திருப்பதை போன்ற படம் உள்ளதுடன், அடுத்த படத்தில் அவரின் உடல் துப்பாக்கி சன்னங்களின் ஓட்டைகளுடன் கிடக்கும் படம் உள்ளது.

எவ்வாறான ஒரு பயங்கரவாதமாக இருந்தாலும் பயங்கரவாதியின்மகனாக இருந்தாலும் இவ்வாறு நடக்கக்கூடாது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகன் கொல்லப்படவில்லை. அவரின் குடும்பத்திற்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியது.

ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமது முன்னாள் தலைவரை மறந்துவிட்டது. அத்துடன் சஹ்ரான் உயிரிழந்தபோதும் அவரது மகள் பாதுகாப்பாக இருக்கின்றார்.
அவ்வாறானால் ஏன் பிரபாகரனின் மகன் மட்டும் கொல்லப்பட்டார்? அவருக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடந்தது? இது தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

உண்மையில் போர்க் காலத்தில் பிரபாகரின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக்குற்றமாக கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.

No comments: