News Just In

6/11/2026 04:10:00 PM

சாய்ந்தமருது பாடசாலைகளில் இரண்டாம் கட்ட நுண்போசனை விட்டமின் வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

சாய்ந்தமருது பாடசாலைகளில் இரண்டாம் கட்ட நுண்போசனை விட்டமின் வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல பாடசாலைகளில் மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட நுண்போசனை (Micronutrient) விட்டமின் வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இந்தச் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், ஜி.எம்.எம்.எஸ். (GMMS) பாடசாலை, ரியாலுல் ஜன்னா வித்தியாலயம் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு நுண்போசனை விட்டமின்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, மாணவர்களின் போசாக்கு குறைபாடுகளைத் தடுப்பதற்கும், ஆரோக்கியமான உடல் மற்றும் மன வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் நுண்போசனை விட்டமின்களின் முக்கியத்துவம் குறித்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், விட்டமின்களை சரியான முறையில் உட்கொள்வதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.

மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்தல் மற்றும் கல்விசார் செயல்திறனை உயர்த்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து மேம்படுத்துவதற்கான தேசிய சுகாதார வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இந்த நுண்போசனை வழங்கும் நடவடிக்கை அமைகின்றது எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை நிர்வாகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் ஒத்துழைப்புடன் பங்கேற்று செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.

No comments: