
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல்கள் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் அவரை முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் அவருக்கு அழைப்பானை விடுத்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2008-ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அரசுத் தலைமை சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில், அவரை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறானது என கோட்டை நீதவான் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளதுடன், அவரை மீண்டும் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்த்து அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவர் இன்று (10) சந்தேக நபராக பெயரிடப்பட்டு, ஜூலை 27 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.
No comments: