News Just In

5/24/2026 03:35:00 PM

சகல துறைகளையும் உள்ளடக்கியதான பாரிய நவீன பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபிப்பதே நோக்கம்!

சகல துறைகளையும் உள்ளடக்கியதான பாரிய நவீன பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபிப்பதே நோக்கம்.
முன்னாள் முதலமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான நஸீர் அஹமட்.


-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நவீன தொழினுட்பப் புரட்சிக்கு தகுந்தபடி எங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கூடிய, சகல துறைகளையும் உள்ளடக்கியதான பாரிய நவீன பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபிப்பதே நோக்கம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், வடமேல் மாகாண முன்னாள் ஆளுநருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் தாருல் உலூம் அரபுக் கல்லூரியில் ஹாபிழ்கள், ஆலிம்களுக்கான அல்குர்ஆன் உயர் கற்கைநெறியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

இக்கல்லூரியின் ஸ்தாபகரான நஸீர் அஹமட் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

காலத்திற்குத் தேவையான கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சிந்தித்து, திட்டமிட்டு கல்வி வழங்கப்பட வேண்டிய கால கட்டத்தில் நாமிருக்கிறோம்.

அதை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்படிருக்கிறது.

மார்க்க விழுமியங்களின் அடிப்படையில், நவீன தொழிநுட்பத்தை எவ்வாறு முகம் கொடுத்து அதனூடாக ஆற்றல்களையும், அறிவையும் அபிவிருத்தி செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு இன்னுமின்னும் அதிகமாகத் தேவை.

இதுவொரு பாரிய சவால்தான். இந்த சவாலை முறியடித்து நவீன தொழினுட்பத்தை நமதாக்கிக் கொள்ளும் சமூகத் தலைமைகளாக, மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மாற வேண்டும்.

அறிவை ஆதாரமாகக் கொண்ட சமூகத் தலைவர்கள் சமூகத்துக்கு தேவைப்படுகிறார்கள். உலோகாயதக் கல்வியில் டிஜிற்றல் தொழினுட்பம் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அதிலிருந்து விலகிவிடவோ, அதை ஒதுக்கி வைத்து விடவோ முடியாது.

டிஜிற்றல் மாற்றமும், செயற்கை நுண்ணறிவும் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற கால மாற்றம் கட்டாயமாகியுள்ளது. ஆகவே இதிலிருந்து மார்க்கத் தலைமைகளும் ஒதுங்கி நிற்க முடியாத காலத்தின் கட்டாயம் உணரப்பட்டுள்ளது. எனவே இந்த கால மாற்றத்தின் கட்டாயத்தை உணர்ந்து நம்மைத் தகவமைத்துக் கொண்டு அறிவையும், ஆற்றலையும், அபிவிருத்தியையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவு இல்லாமல் நாங்கள் எந்தக் கல்வியைக் கற்றும் பயனே இல்லை என்ற நிலையில் உலக தொழினுட்பம் ஆட்கொண்டுள்ளது. அதனுடைய தாக்கமும் ஆழமாக உணரப்படுகிறது.

அதன் தாக்கத்தை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்ளாவிட்டால் அது எங்களைத் தவறாக வழிநடத்த நாமே இடம் அமைத்துக் கொடுத்ததாகி விடும்.

எந்தத் தொழினுட்ப மாற்றம் ஏற்பட்ட போதிலும் அதனை எதிர்கொள்கின்ற சக்தி நமக்கிருக்க வேண்டும்.

ஆகவே, இந்த நவீன தகவல் தொழினுடப்பப் புரட்சியை சிறந்த முறையில், அறிவாற்றலுக்காகப் பயன்படுத்தும் ஒரு அதி நவீன பல்கலைக்கழகமாக இந்த கல்லூரி உருவாக்கப்பட வேண்டும்.

அற்கான அத்தனை முயற்சிகளும் இப்பொழுதிருந்தே முடுக்கி விடப்படும். இதற்கு அறிவுப் புலத்திலுள்ளோரின் ஆதரவு முழுமையாகத் தேவை.

ஏராளமான தகவல்களைக் கொண்ட தகவல் தொழினுட்ப புரட்சி யுகத்தில் நாம் நிற்கிறோம். எது சரி, எது பிழை என்று தெரியாவிட்டால் தகவல் தொழினுட்பப் புரட்சி நம்மை தவறாக வழிநடத்திவிடும்.

எங்களைத் தகவமைத்துக் கொண்டு நவீன தொழினுட்பப் புரட்சிக்கு தகுந்தபடி நாங்கள் முகம் கொடுக்காத வரைக்கும் சமூகத்திலுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் கண்டு கொள்ள முடியாத நிiமை ஏற்படும்” என்றார்.

நிகழ்வில் மார்க்க அறிஞர்கள், ஆலிம்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் பிரசாத் லியனகே. பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சறூக், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் நிருவாக செயலாளரும் ஹாபிழ்கள் ஒன்றியத்தின் ஆலோசகருமான கலாபூஷணம் எம்.எச்.எம். புஹாரி, அறபுக் கல்லூரி மாணவர்கள் ஊர்ப் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் சேவைச் செம்மல்களுக்கு சேவை நலன் பாராட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


No comments: