News Just In

5/24/2026 03:14:00 PM

ஒலுவில் துறைமுகத்தை பாதுகாக்க வேண்டும்; அது பொருளாதார எதிர்காலத்தின் அடையாளம்!

ஒலுவில் துறைமுகத்தை பாதுகாக்க வேண்டும்; அது பொருளாதார எதிர்காலத்தின் அடையாளம் – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்


நூருல் ஹுதா உமர்

ஒலுவில் துறைமுகம் ஒரு சாதாரண உட்கட்டமைப்புத் திட்டமல்ல; அது இலங்கையின் பொருளாதார எதிர்காலம், சமூக நம்பிக்கை மற்றும் பிராந்திய அபிவிருத்தியின் அடையாளமாகும். சர்வதேச அஜந்தாக்கள் மற்றும் பிராந்திய ஆதிக்க சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களுடன் இணைந்த சில உள்நாட்டு அரசியல் ஒத்துழைப்புகள் மூலமாக ஒலுவில் துறைமுகத்தை செயலிழக்கச் செய்யும் முயற்சிகளுடன் சுற்றுலாத்துறையை பாதிப்படைய செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண மக்களின் நீண்டகால சமூக–பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அபிவிருத்திசார் சிந்தனைகளின் வெளிப்பாடாக ஒலுவில் துறைமுகத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் துறைமுகம் ஊடாக மீன்பிடித் தொழில் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் விரிவாக்கம், கடல்சார் சேவைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பொருளாதார வலுப்படுத்தல் போன்ற பல நோக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்தன.

தற்போது துறைமுகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அண்மையில் நிந்தவூர் விஜயத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார். குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகள் கடல் அரிப்பு மற்றும் மணல் தேக்கம் போன்ற தீவிர பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. இந்நிலையை முழுமையாக துறைமுகத்தோடு தொடர்புபடுத்தும் பார்வைகளும் சமூகத்தில் காணப்படுகின்றன. சரியான தொழில்நுட்ப அணுகுமுறை மற்றும் விஞ்ஞான திட்டமிடல் இன்றி துறைமுகம் அமைக்கப்பட்டதே இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் போதுமான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அடிப்படையிலான பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததாலும் பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொள்கைத் தொடர்ச்சியின்மை, நிர்வாக தாமதங்கள், பராமரிப்பு முதலீட்டு குறைபாடுகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி முன்னுரிமை மாற்றங்கள் ஆகியவையும் துறைமுகத்தின் முழுமையான செயற்பாட்டை பாதித்திருக்கின்றன என அவர் தெரிவித்தார்.

“கொழும்பில் உலகத் தரத்திலான துறைமுக நகரத் திட்டத்தை உருவாக்க முடிந்த ஒரு நாட்டில், ஒலுவில் துறைமுகம் ஏன் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை என்ற கேள்வி இன்று இயல்பாகவே எழுகிறது. அதற்கான காரணங்களை அரசியல் கோணத்தில் மட்டும் அல்லாது தொழில்நுட்ப, நிர்வாக, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அடிப்படைகளிலும் ஆராய வேண்டியது அவசியமாகிறது” எனவும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் நிந்தவூர் விஜயத்தின் போது மர்ஹூம் அஷ்ரப் தொடர்பாக முன்வைத்த கருத்துக்கள் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அஸ்ரப் அமைச்சர் ஆனதால் விஞ்ஞான ஆய்வோ தூரநோக்கோ இல்லாமல் ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது; அதன் விளைவாக கடலரிப்பு அதிகரித்துள்ளது” என்ற கருத்து முஸ்லிம் சமூகத்திலும், குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பாரம்பரியத்தை மதிக்கும் மக்களிடையிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஒரு சமூகத்தின் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தின் பொருளாதார சுயநிறைவு மற்றும் அபிவிருத்தி நோக்கங்களையும் முன்னிறுத்திய தலைவராகவும், புலிப்பயங்கரவாதிகளுடன் இணைந்து முஸ்லிங்களை ஆயுதம் தூக்காமல் ஜனநாயக வழிக்கு வழிநடத்திய தலைவராகவும் நினைவுகூறப்படுகிறார். மட்டுமில்லாது தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் உள்ளிட்ட அவரின் பல திட்டங்கள் அந்த நீண்டகால அபிவிருத்தி சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஒரு சிறிய கட்சியின் தலைவராக நீண்டகாலம் பாராளுமன்றத்தில் நிலைத்து நின்று பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்திருப்பதற்கான ஜனநாயக அரசியல் பாதையை இந்த நாட்டில் உருவாக்குவதில் மர்ஹூம் அஷ்ரப் போன்ற தலைவர்களின் பங்களிப்பும் மறுக்க முடியாததாகும்” என்றும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒலுவில் துறைமுகம் தொடர்பாக சுயாதீன தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச தரப்படுத்தல்களுக்கேற்ப பராமரிப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். பிராந்திய மக்களின் பங்களிப்புடன் கூடிய வெளிப்படையான நிர்வாக முகாமைத்துவம் மற்றும் அறிவியல் கண்காணிப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒலுவில் துறைமுகம் கைவிடப்பட வேண்டியதல்ல; அது பாதுகாக்கப்பட்டு, விஞ்ஞான ரீதியாக முகாமைத்துவம் செய்யப்பட்டு, தேசிய மற்றும் பிராந்திய நலனுக்காக திறம்பட செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: