News Just In

5/24/2026 03:05:00 PM

கிழக்கு மாகாண ஆளுநரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாண ஆளுநரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆரம்பித்து வைத்துள்ளார்.

வீதிகள், பாடசாலை வகுப்பறைக் கட்டிடங்கள், வடிகான்கள் போன்ற பாரிய அபிவிருத்திப் பணிகள் ஆளுநரால் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

போரதீவு, பளுகாமம், தும்பங்கேனி, திக்கோடை ஆகிய வீதிகளின் வடிகான்கள், குறுக்கு வடிகான் அமைப்புகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை 90 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் அன்றாடப் போக்குவரத்தை எளிதாக்குவதையும், அப்பகுதியின் அபிவிருத்தியை மேலும் விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஓந்தாச்சிமடம் - கோட்டைக்கல்லாறு வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள், 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டம் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும்.

இதேபோன்று 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொக்கடிச்சோலை - அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஒதுக்கீட்டின் கீழ் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 1500 மீற்றர் நீளமான கொக்கட்டிச்சோலை - அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த வீதி அபிவிருத்திப் பணிகளை முடிக்க 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சிறப்பு அபிவிருத்தி மானியம் திட்டத்தின் கீழ், வலையிறவு பாலத்தைச் சுற்றியுள்ள வீதிகளை அகலப்படுத்தி நவீனப்படுத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், வலையிறவுப் பாலத்தைச் சுற்றியுள்ள வீதிகளையும், வீச்சுக்கல்முனை வீதியின் சில பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதாகும். இதற்கென 45 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 120 நாட்களுக்குள் முடிக்கப்படவுள்ளது.

இந்த அபிவிருத்திப் பணிகள் மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும், வீதிப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிராந்தியப் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மக்களுக்குத் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கிழக்கு மாகாண நிதியின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு தாண்டியடி தமிழ் கலவன் பாடசாலையில், புதிய இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தின் அபிவிருத்திப் பணிகள், துவக்கி வைக்கப்பட்டன.

அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவும் கலந்து கொண்டார்.

No comments: