News Just In

6/06/2023 06:28:00 AM

இலங்கையிலிருந்து இரண்டாவது முறையாகவும் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம்!

இலங்கையிலிருந்து இரண்டாவது முறையாகவும் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தமிழக அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 31ம் திகதி மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் கடற்கரை அதிகாரிகள் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இலங்கை மணாலி தீவுக்கும் சிங்கள தீவுக்கும் இடையே பதிவெண் இல்லாத படகு ஒன்று வந்தது. அதிகாரிகளை கண்டதும் அந்த படகிலிருந்தவர்கள் தப்பிக்க முயன்றனர்.

இதனால் படகை பின் தொடர்ந்த அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்பொழுது தங்கக் கட்டிகளை கடலில் வீசிய நபர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். தொடர்ந்து விரட்டிய இந்தியக் கடற்படை அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரும் மண்டபம் கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணையையடுத்து 10 கிலோ தங்கக் கட்டிகளை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அடுத்த நாளே கடற்படை அதிகாரிகள் கடல் பகுதியில் தங்கக் கட்டிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை நாட்டுப்படகில் கடத்தி வந்துள்ளனர்.






சந்தேகத்திற்கிடமாக நின்ற நாட்டுப் படகை சோதனை செய்ததில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments: