News Just In

4/19/2023 02:12:00 PM

தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூல வரைவு 'ஜனநாயகத்துக்கெதிரானதாகவே” கொள்ளப்படவேண்டும்.



- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமூல வரைவு 'ஜனநாயகத்துக்கெதிரானதாகவே” கொள்ளப்பட வேண்டும். என இது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமூல வரைவு தொடர்பான சிவில் சமூகத்தின் அவதானிப்புக்கள் விழிப்புணர்வூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை 18.04.2023 இடம்பெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு அதன் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் வளவாளருமான ஷெரீன் சருர் பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமூல வரைவு தொடர்பாக சிவில் சமூகம் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாக தெளிவூட்டினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வளவாளர் ஷெரீன், யுத்தத்தின் கோரப்பிடியிலிலிருந்து விடுபட்டுள்ள இலங்கை தனது பிரஜைகளை ஓரங்கட்டி அவர்கள் மீது பரந்தளவில் திணிக்கப்பட்டுள்ள கடுமையான சட்டங்களை இன்றுமட்டும் அகற்றியிருக்க வேண்டும். இருந்தும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் 40 வருடங்களாக பிரஜைகளின் மீது குறிப்பாக சிறுபான்மை மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள 1979ம் ஆண்டின் பயங்கரவாதத்துக்கெதிரான சட்டத்தின் (PTA) அடுத்த முயற்சியாக கடந்த மார்ச் 17ம் திகதி புதிய பயங்கரவாதத்துக்கெதிரான சட்டக்கோவை (ATA) முன்மொழியப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் சிவில் சமூகம், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மை உட்பட ஏனையோரின் சட்டபூர்வமான, அமைதியான செயற்பாடுகளையும் அரசாங்கத்துக்கெதிரான மாற்றுக்கருத்துக்களையும் ஒடுக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் பாவிக்கப்பட இருப்பதை அரசாங்கம் யுவுயு மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

வழமையைப்போல இம்முறையும் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூல வரைவில் இருக்கும் ஏற்பாடுகளுக்கான சூழமைவும் நோக்கமும் குறிப்பிடப்படவில்லை. ATAயின் முன்னுரையின்படி, நாட்டின் பொருளாதாரம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதனால் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு கட்டுப்படுவதோடு உலகின் ஏனைய இறைமையுள்ள நாடுகளையும் பாதுகாப்பதற்கான உறுதியுரையும் அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட எந்த நோக்கங்களும் யுவுயுயின் ஏற்பாடுகளில் பிரதிபலிக்கப்படவில்லை.

யுவுயுயில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வகையான குற்றங்களுக்குமான சட்டங்கள் பரந்தளவில் குறிப்பிடப்பட்டிருப்பினும் உண்மையில் இம்முன்மொழிவு அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் பிரஜைகளுக்கெதிரான பிரேரணையாகவே கொள்ளப்படவேண்டும்.

பொதுமக்களின் எழுச்சியின்போது முடுக்கிவிடப்பட்டுள்ள ATA

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்நேரத்தில் அரசாங்கம் கொண்டுவந்துள்ள கொள்கைகள் மக்களின் மீது பலத்த அடியாக உள்ள சந்தர்ப்பத்தில் ATA அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாது மத்தியதர மக்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பது வாடிக்கையாகியுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குறி வைத்தே ATA வரையப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலும் உயர்தட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, போராட்டக்காரர்கள் 'தீவிரவாதிகளாக” காட்டப்பட்டுள்ளார்கள்.

இதன்மூலம் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூல வரைவு 'ஜனநாயகத்துக்கெதிரான சட்டமூலமாகவே” கொள்ளப்படவேண்டும்.

இந்நிகழ்வில் திட்ட அலுவலர் ஸ்ரீயானி ஜோசெப் உட்பட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சமயப் பெரியார்கள். தன்னார்வ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments: