News Just In

11/07/2020 11:44:00 AM

கோறளைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்படுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உப பிரதேச சபை அலுவலகம் அவசியம்!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக முடக்கப்பட்டுள்ள கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் உப பிரதேச சபை அலுவலகமொன்றைத் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் என கோறளைப்பற்று பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.கபூர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றுக் காரணமாக கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

இவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எமது கடமை. அதற்கு குறித்த பிரதேச சபைக்குள் பிரவேசிப்பதற்கே பல முட்டுக்கட்டைகளை கோறளைப்பற்றிலுள்ள சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருவதுடன், கோறளைப்பற்று மத்தியில் தான் கொரோனா உள்ளது அதனால் அப்பகுதியில் இருந்து கோறளைப்பற்று பிரதேச சபைக்கும் கோறளைப்பற்று பிரதேச செயலக பகுதிக்கும் வர வேண்டாம் என்ற பிரதேச சபையிலுள்ள இரண்டாம் மட்ட அதிகாரிகளே கட்டளைகளையும் இடுகின்றனர். 

இந்நிலையில், பிரதேச செயலக ரீதியில் கோறளைப்பற்று மத்தியிலும் சபை ரீதியாக கோறளைப்பற்றிலும் தமது அலுவலகக் கடமைகளை மேற்கொண்டு வந்த எமது மக்கள் தமது பிரதேசத்தில் பிரதேச சபை ரீதியாக மேற்கொள்ளும் பணியினை முன்னெடுத்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பணியினை முன்னெடுக்க உப பிரதேச சபை அலுவலகம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்கு அத்தியாவசியமாகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க முடியாத நிலையில் மக்கள் பிரதிநிதிகளாகிய ஆறு முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளோம் என்பது கவலையளிக்கும் விடயமாகும். 

இவைகளைக் கருத்திற் கொண்டே எமது பணியினை முன்னெடுக்க பிரதேச சபைக்குள் அனுமதி மறுக்கப்படும் நிலையில், குறித்த உப பிரதேச சபை அலுவலகத்தைக் கோரி நிற்கின்றோம். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் எம்மால் விடுக்கப்படும் கோரிக்கையின் நியாயத் தன்மையினை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் முஸ்லிம் தமிழ் உறவைச் சீர்குலைக்கும் சில சக்திகள் எமது உப பிரதேச அலுவலகக் கோரிக்கையினை இனவாதக் கண்ணோட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருவதையும் நாங்கள் அறிவோம். 

அவ்வாறான இனவாத அரசியல் செய்யும் சாராரின் கருத்துக்களைப் புறந்தள்ளி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் பத்தொன்பதாயிரத்திற்கம் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட பிரதேச செயலகத்திற்கு ஒரு உப பிரதேச சபை அலுவலகத்தை வழங்குவது சம்பந்தப்பட்டவர்களின் கட்டாயக் கடமையாகும். நிர்க்கதி நிலையிலுள்ள மக்களின் பிரச்சனைகளை சற்று கவனத்திலெடுக்க வேண்டிய பிரதேச சபையும் அதன் தவிசாளரும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களும் குறித்த பிரதேச சபைக்கு வரி செலுத்துகிறார்கள். 

அவர்களது அதிகப்படியான வருமானங்கள் மூலமே குறித்த பிரதேச சபையின் நிதித்தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது என்பதை மறந்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. எமது பிரதேசத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் சுமார் இரு வாரங்கள் கடக்கும் நிலையில் கோறளைப்பற்று பிரதேச சபை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேற்கொண்ட ஆக்கபூர்வமான பணி ஏதுமில்லை. வெறுமனே மக்களை அடைத்து வைத்துக் கொண்டிருப்பதால் மட்டும் கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என்பதையும் தாண்டி அல்லல்படும் மக்களுக்கான மனிதாபிமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது மக்கள் மன்றமான பிரதேச சபையின் தலையாக கடமையாகும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. 

வெறுமனே சபையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மாத்திரம் தேவைப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது ஒட்டு மொத்த மக்களையும் உதாசீனம் செய்யும் செயற்பாடு என்பதை தவிசாளர் மறந்து செயற்படக்கூடாது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் கொரோனா தொற்றுள்ளது என்றும், அதனால் அப்பகுதில் இருந்து கடமைக்கு எவரும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு வரக்கூடாது என்று சுகாதாரத்தரப்பினர் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொண்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் பத்து நாட்களுக்கும் மேலாக குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமலிருந்து முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களின் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தான் கடந்த இரண்டு நாட்களாக குப்பைகள் அகற்றப்படுகின்றன. 

எமது பிரதேசத்தில் தற்போது கொரோனாவுடன் டெங்கும் வேகமாகப் பரவி வரும் இச்சந்தர்ப்பத்தில், திண்மக்கழிவுகளும் அகற்றப்படாமல் விட்டால் எமது மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையுமென்பது எல்லோரும் அறிந்த விடயமே. 

கோறளைப்பற்று பிரதேச சபைப்பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு உப பிரதேச சபை அலுவலகமொன்றை அமைத்துத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சந்தர்ப்பத்தில் வினயமாக கேட்டுக் கொள்கிறேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: