News Just In

10/01/2026 05:50:00 PM

இலங்கையின் பெரும்பாலான பாம்புகள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை

இலங்கையின் பெரும்பாலான பாம்புகள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை




இலங்கையில் உள்ள பாம்பு இனங்களில் மிகச் சிறிய பகுதி மட்டுமே மனிதர்களுக்கு மருத்துவ ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும், பெரும்பான்மையான பாம்புகள் மனிதர்களுக்குப் பாதிப்பில்லாதவை என என சுற்றுச்சூழல் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய நாகப்பாம்பு, விரியன் மற்றும் சாரைப் பாம்பு போன்ற இனங்கள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் கொறித்துண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, நோய்ப் பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேவையற்ற பயத்தாலும் தவறான தகவல்களாலும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பாம்புகள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச பாம்பு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் உலகப் பாம்பு மாநாடு 2026 (World Congress on Snakes 2026 – WCS 2026) கண்டியில் உள்ள கிராண்ட் கண்டியன் விடுதியில் இன்று (01) காலையில் நடைபெற்ற ஆரம்ப விபத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பாம்புகள், அறிவியல், இனங்களின் உயிர்வாழ்வு மற்றும் இலங்கை என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஒக்டோபர் 01 முதல் 04 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இந்நிகழ்வு இடம்பெறுகிறது.

இம்மாநாட்டின் தலைமைப் பீடத்தை கலாநிதி அன்சம் டி சில்வா வகித்ததுடன், மாநாட்டு ஏற்பாட்டாளர்களாக கலாநிதி நிமல் ரத்நாயக்க, கலாநிதி கனிஷ்க உக்குவெல, சுரஞ்சன் கருணார்தன, இம்ரான் ஹசன் உள்ளிட்டோர் செயற்பட்டனர். இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் விசேட மருத்துவர் எஸ். பெனாண்டோ, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, கண்டி மாநகர சபை முதல்வர் சந்திரசிறி விஜயநாயக்க, வனஜீவராசிகள் பணிப்பாளர் ஜெனரல் ரஞ்சன் மாரசிங்க உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

உலகெங்கிலும் இருந்து 43 நாடுகளைச் சேர்ந்த முன்னணி பாம்பு ஆராய்ச்சியாளர்கள், பல்லுயிர்ப் பெருக்கு நிபுணர்கள், வனவிலங்கு மேலாளர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ள இந்தமாநாட்டின் அமைச்சர் தொடர்ந்து தமதுரையில் குறிப்பிடுகையில்:

இலங்கையின் கலாச்சார மற்றும் ஆன்மீக வரலாற்றில் பாம்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரண்டறக் கலந்துள்ளன. பௌத்த மற்றும் இந்து பாரம்பரியங்களில் நாகங்கள், குறிப்பாக நாகப்பாம்பு, பாதுகாப்பு மற்றும் புனிதத்தன்மையின் அடையாளமாகத் திகழ்கின்றன. அநுராதபுரம் மற்றும் பொலநறுவ போன்ற வரலாற்றுத் தளங்களில் காணப்படும் பண்டைய காவல் கற்களும் சிற்பங்களும் நமது நீண்டகால கலாச்சார உறவுக்குச் சாட்சியாக விளங்குகின்றன.

உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 138,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோர் நிரந்தர ஊனங்களுக்கும் மனநலப் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். இலங்கையிலும் கிராமப்புற மற்றும் விவசாய சமூகங்களே இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே, பாம்புக்கடி என்பது வெறும் மருத்துவப் பிரச்சினை மட்டுமல்லாமல், வறுமை மற்றும் சமத்துவமின்மையுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சமூக-பொருளாதார சவாலாகும்.

இலங்கையில் உள்ள பாம்பு இனங்களில் மிகச் சிறிய பகுதி மட்டுமே மனிதர்களுக்கு மருத்துவ ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும், பெரும்பான்மையான பாம்புகள் மனிதர்களுக்குப் பாதிப்பில்லாதவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்திய நாகப்பாம்பு, விரியன் மற்றும் சாரைப் பாம்பு போன்ற இனங்கள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் கொறித்துண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, நோய்ப் பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேவையற்ற பயத்தாலும் தவறான தகவல்களாலும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பாம்புகள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பாம்புக்கடிக்கான தேசிய விடையிறுப்பை வலுப்படுத்துதல், மருத்துவமனைகளின் திறனை மேம்படுத்துதல், தரவுகளைத் திரட்டுதல் மற்றும் இலங்கையின் தனித்துவமான அகணிய உயிரினங்களைப் பாதுகாத்தல் போன்ற பல முக்கிய இலக்குகளை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கூட்டுறவுடன் அறிவியல் பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் சுமார் 112 சர்ப்ப இனங்கள் பதிவாகியுள்ளன. இதில் 63 இனங்கள் எமது நாட்டிற்கு உரித்தானவை. இது சதவீத அடிப்படையில் 56.3 சதவீதமாகும். சர்ப்பங்கள் தொடர்பான உலகளாவிய மாநாடு ஒன்று நடத்தப்படுவது அறிவியல் ரீதியாக மாத்திரமன்றி, நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த ஒரு பிரச்சினை குறித்து உலகளாவிய சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும் வழிவகுத்துள்ளது.

அறிவியலை நம்புவோம், தவறான தகவல்களைத் தவிர்ப்போம், தேவையற்ற அழிவுக்குப் பதிலாக பாதுகாப்பைத் தேர்ந்தெடுப்போம், மோதலுக்குப் பதிலாக பொறுப்பான சகவாழ்வைத் தேர்ந்தெடுப்போம் என்று மாநாட்டு நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

ஒக்டோபர் 04 வரை இடம்பெறவுள்ள இந்த மாநாடு வெறும் கல்விசார் விவாதங்களுடன் நின்றுவிடாமல், கொள்கை மாற்றங்களையும் மனித மற்றும் வனவிலங்கு உயிர்களைக் காக்கும் நடைமுறை நடவடிக்கைகளையும் உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் இந்த அமர்வு நடைபெறுகின்றதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது, உலகின் முதல் சர்ப்ப மாநாட்டைக் குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, தபால் துறைப் பணிப்பாளர் எல்.ஜி.என். டி சில்வா அவர்களால் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments: