
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதன்முறையாக தவெக நிர்வாகிகள் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) மாலை தவெக தலைவர் விஜய் உயிரிழந்தோரில் இருவரின் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் கரூர் காந்திகிராமம் காந்திநகரைச் சேர்ந்த தனுஷ்குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். இதனை தனுஷ்குமாரின் உறவினர் ஒருவர் உறுதி செய்துள்ளார். அப்போது தனுஷின் சகோதரி ஹர்ஷினியிடம், “நான் உங்களுக்கு சகோதரனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது யாரும், புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதாக தகவல்.
அதேபோல், நேற்றிரவு ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலிடம் (டாஸ்மாக் ஊழியர்) விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். கூட்ட நெரிசலில் இவரது மனைவி பிரியதர்ஷினி (35) மற்றும் மகள் தரணிகா (15) ஆகியோர் உயிரிழந்தனர். பிரியதர்ஷினி தவெக நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேலிடம் வீடியோ காலில் பேசிய விஜய், “இது ஈடு செய்ய முடியாது இழப்பு. நான் மிகவும் வருந்துகிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன். தவெக தேவையான உதவிகளைச் செய்யும்.” என்று கூறியதாகத் தெரிகிறது
இரண்டு குடும்பங்களுடன் பேசும்போதும் விஜய் அதிக நேரம் மவுனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் ஒவ்வொருவரின் குடும்பத்தாருடனும் விஜய் வீடியோ காலில் பேசுவார் என்று தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் நேரில் சென்று தகவல் சொல்லி வருகின்றனர்.
No comments: