News Just In

9/14/2025 09:06:00 AM

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவே!

தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவே!



முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு வாக்களிக்க வேண்டியதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தீர்மானித்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சாணக்கியன், ஜனாதிபதியுடனான சமீபத்திய சந்திப்பில் மாகாண சபை தேர்தல், வடகிழக்கு அபிவிருத்தி நிதியம், மற்றும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் இது உத்தியோகபூர்வ சந்திப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக எல்லை நிர்ணயம் மற்றும் விகிதாசார முறை குறித்து அரசாங்கத்தில் குழப்பம் இருப்பதாகவும், ஜனாதிபதி இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி நிதியம் உருவாக்குவது குறித்து முன்னர் பேசப்பட்ட போதிலும் முன்னேற்றம் இல்லை எனவும், மாவட்டத்தில் நிலவும் நிர்வாக மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்தை மக்கள் நலன் சார்ந்ததாக கருதி ஆதரிக்க வேண்டும் என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சாணக்கியன், இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழு இதற்கு வாக்களிக்காதது தவறான முடிவு எனவும், இதற்காக மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டமூலங்களுக்கு கட்சி ஆதரவு வழங்க வேண்டும் எனவும், ஊழல் ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் விடயங்களில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

No comments: