நடைமுறை அரசியல் மிகக் கடினமான பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. பலம் வாய்ந்த சக்தியை அழிக்க மென்மையான இராஜதந்திரத்தை ஒரு கூரிய ஆயுதமாக பயன்படுத்தும் வித்தை அரசியலில் உண்டு.
முள்ளிவாய்க்காலின் பின் இத்தகைய ஒரு தந்திரத்தை எதிரி மிகச் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ள காலனிய ஆதிக்க எஜமான் ஒரு இலகுவான தந்திரத்தை பிரயோகித்தார்.
அதே தந்திரத்தைத்தான் இப்பொழுது தமிழ் மண்ணில் சிங்கள பேரினவாத சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன் பிரித்தானியாவை விடவும் சுமாராக 21 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை 7,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பிரித்தானியாவால் இலகுவாக கட்டுப்படுத்தவும் ஆளவும் முடியாது.
அதற்கு வெறும் புயபல பராக்கிரமம் மட்டும் போதுமானதல்ல. சதிகளும், சூழ்ச்சிகளும், இராஜதந்திர வியூகங்களும் அவசியமானவை. அந்த வகையில் இந்திய மக்கள் பெரும் கிளர்ச்சிகளிலோ, ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலோ ஈடுபடாமல் தடுப்பதற்காக பிரித்தானியரே இந்திய தேசிய விடுதலை அமைப்பை மிதவாத தலைமைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டுமென பிரித்தானிய ஆட்சியாளர்கள் தீர்மானித்தனர்.
இதற்கமைய, A. O. ஹியூம் ( A.O. Hume ) என்ற பிரித்தானிய உளவாளியினால் 1885ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய அதிர்ச்சியூட்டும் செய்திகள் பிற்காலத்திற்தான் தெரியவந்தன.
இலங்கை அரசியலில் தமிழரை தோற்கடிப்பதற்கு தமக்கான நேரடி கையாட்களாக டி.எஸ். சேனநாயக்க அ.மகாதேவாவையும், சிறிமாவோ பண்டாரநாயக்கா குமாரசூரியர், ஆல்பிரட் துரையப்பா போன்றோரையும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன கலாநிதி ஆ.தியாகராஜாவையும் தத்தமது கட்சிகளின் சார்பில் நேரடியாக பயன்படுத்தினர்.
அவ்வாறு பயன்படுத்தியமை பெரிதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின. இத்தகைய அனுபவங்களில் இருந்து சிங்கள இனவாதம் புதிய பாடங்களை கற்றுக்கொண்டது.
அதன்படி முள்ளிவாய்க்காலின் பின்பு இராணுவ ரீதியான இனப்படுகொலையின் வாயிலாக தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டாலும் அதனை வேரோடு அழிப்பதற்கு அரசியல், இராஜதந்திர ரீதியான வழிகள் முக்கியம் என்பதை உணர்ந்தனர். தமிழருக்கான தலைமைத்துவத்தை சிதைப்பதை அவர்கள் முக்கிய இலக்காகக் கொண்டனர்.
இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு வாய்ப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ் தலைவர்களை உருவாக்க முற்பட்டனர்.
குறிப்பாக தமிழரசு கட்சிக்குள் அத்தகைய கோடாலிக் காம்புகளை தமது கையாட்களாக வெளியில் இருந்து புகுத்துவதை நீண்ட கால நோக்கினான முதலாவது தெரிவாகவும் கூடவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய புல்லுருவிகளை தமது கையாட்களாக மாற்றுவதை இன்னொரு வழிமுறையாகவும் கொண்டனர்.
1977 - பொது தேர்தல்
முதல் கட்டமாக அத்தகைய கோடாலிக் காம்புகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் வெற்றி கண்டன. அடுத்த கட்டமாக தமிழரசுக் கட்சியை உடைப்பதில் திறமையாக செயற்பட்டனர்.
அதுவும் இப்போது துண்டுபட்டு போய் உள்ளது. பொருத்தமான தருணங்களில் அந்தத் தமிழரசு கட்சியை முடக்குவதிலும் வெற்றி பெற்றனர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழரசு கட்சியை முடக்கும் வகையில் அதனை நீதிமன்றம் வரை இழுத்து தமது சதிகார அரசியலை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளனர்.
இப்போது இந்தத் தமிழரசுக் கட்சிக்குள் புகுந்துள்ள இத்தகைய உளவாளிகளை கட்சிக்குளிருந்து அம்பாந்தோட்டைக் கடல் வரை துரத்தி அடிக்காமல் தமிழரசு கட்சியை மீட்கவோ, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கவே முடியாது.
தமிழர் விடுதலை கூட்டணி 1980ஆம் ஆண்டு ஜே.ஆர் இன் மாவட்ட அபிவிருத்திச் சபைக்குள் சரணடைந்த காலத்தில் "கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்" , "அமீர் அண்ணாச்சி தமிழீழம் என்னாச்சு?" என்ற கோஷங்களுடன் இளைஞர், யுவதிகளும் மக்களும் எழுந்தனர்.
தமிழ் மக்களின் தன்னிகரில்லா தலைவனாய் 70களின் பிற்பகுதியில் எழுந்த அமிர்தலிங்கத்திற்கு, 1977 பொது தேர்தலின் மூலம் மக்களின் பேராதரவுடன் பெரும் தலைவனாய் அமிர்தலிங்கம் மணிமுடி சூடிக்கொண்டார்.
அவ்வாறு ஒரு பெரும் தலைவனாய் திகழ்ந்த அமிர்தலிங்கத்திற்கு 1981ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் கொடும்பாவி கட்டி எரிக்கப்பட்டது.
அன்றிலிருந்து அமிதலிங்கத்தாலும் அவரது ஒத்தூதிச் சகாக்களினாலும் தமிழ் மண்ணில் தங்கள் சொந்த கிராமங்களுக்குக்கூட போக முடியாத நிலை இருந்தது. கிராமங்களிலுள்ள கோவில்களுக்குக்கூட அமிர்தலிங்கத்தால் போகமுடியவில்லை.
அப்படி என்றால் முள்ளிவாய்க்காலின் பின்பு ஹாயூம்ங்களாய், கோடாலிக்காம்புகளாய் வலம் வருபவர்களின் கதி என்ன? 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாய் மணிமுடி தரித்துக்கொண்ட கோட்டாபயவையும், ராஜபக்சக்களையும் வாக்களித்த அதே மக்களே நிற்க, இருக்க இடம் இல்லாமல் நாடுவிட்டு நாடு துரத்தினர்.
சிம்மாசனத்திலிருந்து இழுத்து வீழ்த்தினர் என்ற கண்கண்ட வரலாற்றை மறந்திட முடியாது. கொள்கையும், இலட்சியமும், தமிழ் பற்றும்மிக்க தமிழரசு கட்சி தொண்டர்களே நீங்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். மாறாக எதிரியால் கட்சிக்குள் புகுத்தப்பட்டிருக்கும் சதிகார ஹியூம்ங்களையும், கோடாலிக் காம்புகளையும், வேடதாரிகளையும் கட்சியைவிட்டு ஓட ஓட துரத்தி அடியுங்கள். அதுதான் உண்மையான ஜனநாயகம்.
மைத்திரிபால - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும் என்றும் அப்படி இல்லையேல் தான் பதவி விலகுவேன் என்றும் மேடைக்கு மேடை முழங்கிய அ.சுமந்திரன் ஜனநாயகத்தின் பெயரால் தான் வாக்குறுதி அளித்தபடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழரசு கட்சி தொண்டர்களே ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புங்கள்.
தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டியது அவரது ஜனநாயக பூர்வமான கடமை. அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது அவரது பொறுப்பு. அதை நடைமுறையாக்க வேண்டியது தமிழரசு கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரினதும் கடமையும், பொறுப்பும், பணியுமாகும்.
இதுவரை எதிரியால் கொன்றொழிக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களின் பேரால், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள் கற்பிணித் தாய்மார், பெண்கள் வயோதிபர்கள் என கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் பேரால், இதுவரை காலமும் ஏற்பட்ட அளப்பெரும் இழப்புக்கள், ஒப்பற்ற தியாகங்கள் என்பனவற்றின் பேரால் இத்தகைய ஹியூம்களையும், கோடாலி காம்புகளையும் முதலில் அகற்றி போராட்டத்தை சுத்திகரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையும் பொறுப்புமாகும்
.நன்றி எழுத்தாளர் T.Thibaharan
No comments: