(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 24 வருடங்கள் கடமையாற்றிய டொக்டர் உவைசுல் பாரி தனது 31 வருட கால அரசசேவை சுகாதாரப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவருடைய அர்ப்பணிப்புமிக்க சேவையினை பாராட்டி மருதமுனை பிரதேச வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டும், பிரியாவிடை நிகழ்வு அண்மையில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையில் இடம்பெற்றது.
மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் பலர வருடங்கள் கடமையாற்றி அப்பிரதேச மக்களுக்கு அளப்பெரும் சேவையாற்றியமைக்காகவும், வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காகவும் டொக்டர் உவைசுல் பாரி குறித்த நிகழ்வின் போது அதிதிகள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அபிவிருத்தி குழுவினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகவும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர் கெளரவ அதிதியாகவும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உப தலைவரும் பேராசிரியருமான, எஸ்.எம்.ஜூனைடீன், செயலாளர் பி.எம்.யாசிர் அறபாத், சரோ பாம் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜுடீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
வைத்தியர்களான ஏ.எம்.எம்.அஸ்ஹர் மற்றும் ஏ.புஸைறா, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் அபிவிருத்தி குழுவினர், டொக்டர் உவைசுல் பாரியின் குடும்பத்தினர் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: